Tuesday, November 18, 2008

La Sa Ramamirtham - the astounding tamizh writer

அடையாளங்கள் - லா.ச.ரா.

தருணத்தின் தர்க்கத்தினின்னு இன்னும் மீளவிலை. தேடினால் வராது; ஆனால் எதிர்பாராத சமயத்தில் பின்னால் வந்து தோளை தொடும் தருணத்தின் ஸரஸம்.

எண்ணத்தோடு, அதனினும் மஹத்தான இன்னொரு எண்ணம் இழையும் ரஸாயனத்தில், மனம் நித்யத்வத்துடன் உராய்கையில், வேறு ரோமாஞ்சலி, நெஞ்சடைப்பு, தனக்குத்தானே தனிழப்பு, பயம், கணமேயுகம். யுகமே கணம் - கோடுகள் அறிந்த நிலையில் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு ஒரு ஆனந்தம் - ஆனால் நொடி நேரமே தாள முடியாது. ஆனால் அதில் அமுதம் உண்டு விட்டேனே! அதற்காக அலைகிறேன்.

தரிசனத்துக்கு ஆதாரம் அன்புதான். அன்பின் பெருக்கு. அன்புக்கேற்றபடி ஆவாஹனம் ஆவாஹனத்துக்கு ஏற்றவாறு தரிசனம். தரிசனம் என்பது என்ன? அன்பின் அலைச் சிகரத்தில் சமயத்துக்கேற்றவாறு அவள் தோன்றுவிதம், ரூபம். இங்கு அரூபமும் ரூபம்தான்; ஆமாம் யார் அவள்?

நித்யத்வத்தில், மானிடப் பரம்பரை வழிவழி. நம்பிக்கையின் தீவிரத்தில் செதுக்கப்பெற்று, அதே வழிவழி பக்தியில் ஊறி, இலக்கியமென்றும் இசையென்றும் கலை, ஞானம், விஞ்ஞானம், தியானம் என்றும் பல்வகை வழிபாடுகளில் செழித்தவள்.

அவள் எங்கும் நிறைந்த சக்தி ஆதலால் அவளை தனி உருவத்தில் முடக்குவதற்கில்லை.

வான் நீலம் அவள் நிறம்.

வாழை மரத்தில் ஆடும் தலைவாழையிலை அவள் பச்சைப் பட்டுப்பாவாடை.

அதோ செம்பருத்திச் செடியில் எட்டா உயரத்தில் என்னப் பார்த்து நாக்கை நீட்டிச் சிரிக்கிறாள்.

துளும்பிய கண்ணீர்த் துளியில், குமுறும் இடியில் நிறைந்த மனதில், இருவரிடையே தேங்கும் மௌனத்தில்.

பூவரச மரத்தினின்று தானே சுழன்று சுழன்று உதிரும் இலையின் காவிய சோகத்தில்.

கிணறுள், அதோ ஆழத்தில் சுரந்து கொண்டேயிருக்கும் தாரைகளில்,

கோபுர ஸ்தூபி உச்சியில் உட்கார்ந்து சிறகைக் கோதி, உடனே பறக்கும் பச்சைக் கிளியின் சொகுஸில்,

அடுத்த சமயம் அதே ஸ்தூபி மேல் கழுகின் சிறகு விரிப்பில்.

சொல்லிக் கொண்டே போகலாம். உவமைகளில், உருவங்களில், அடையாளமாய்த் தன்னைக் காட்டிக் கொள்கிறாள். உள்ளத்தின் நெகிழ்ச்சியில் அவள் நடமாட்டம்; மௌனத்தின் உச்சிதான் அவள் வாழுமிடம்.

திரிகரண சுத்தியில் எப்பவுமே இருக்க முடியாது. சுத்தமாயிருக்க ப்ராயத்தனம் தான் செய்ய முடியும். அழுக்கு சேர்ந்து கொண்டே தான் இருக்கும்.

ஆனால் சில அபூர்வ சமயங்களில், முகூர்த்த வேளைகள் என்றே சொல்லலாம். தருணங்கள்; நான் என் பாசாங்குகளைக் களைந்து, பொய்மையில் மூழ்கிக் கிடந்த என் நாணயம் தானே மேல்வந்து, நான் யாருடனும், எதனுடனும் விரோதமில்லாமல் புவனத்தின் ஜீவஸ்ருதியோடு இழைந்துபோன வேளையில், இதயத்தின் அமுத கலசம் பொங்குகையில், தன் ஸஹிக்க முடியாத சௌந்தர்யத்தில் அவள் தோன்றுகிறாள். என் உள்ளத்தின் சதுப்பில் இறங்கி நடக்கிறாள். மார்பை இருகைகளாலும் பொத்திக் கொள்கிறேன். அவள் பாதச்சுவடுக்ளின் இன்பம் தாங்க முடியவில்லை. அதோ அவள் கொலுசு சப்தம் கேட்கவில்லை?

அவள் தருண்யை.

தெய்வம் வேண்டாம். ஆனால் தரிசனம் கட்டாயம் வேண்டும்.

வார்த்தைகள் கிளிஞ்சல்கள்.

அடையாளங்கள் (கட்டுரையின் சில பகுதிகள்) - லா.ச.ரா. (லா. ச. ராமாமிருதம்)

No comments: